Posts

Showing posts from April, 2024

துணைவியின் பிறந்தநாள் வாழ்த்துக்கவிதை

 வள்ளுவன் குரல் கேட்டு  வாவிக் கயிற்றை விட்டு வந்த வாசுகி அல்ல  இதயப் புத்தகத்தின் வாசகங்களுக்கு  வசமான வாசகி அவள் ராமன் காலடி பற்றி  கானகத்தில் அயோத்தி  கண்ட சீதை  அல்ல வாழ்க்கைத் தேரினில்  சாரதியாய் அமர்ந்து  வழிகாட்டிய கீதை அவள் கோவலனைக் காவலன்  கொல்ல மதுரையை  எரித்த கண்ணகி அல்ல  காலத்தின் கோலத்தில்  துன்பத்தை எரித்து இன்பத்தைக் காட்டிய கண்மணி அவள் பாமாலையும் பூமாலையும் சூடிக்கொடுத்த சுடர்க்கொடி ஆண்டாள் அல்ல பாச மகுடம் சூடி   பண்புச் செங்கோல் ஏந்தி  என் நெஞ்சத்தை ஆண்டாள் அவள் சித்திரை நிலவே  அத்தையின் மகளே  சென்ற எதையும் மறக்காமல்  அன்றைய நிகழ்வுகளின் நினைவுகளோடு ஶ்ரீராமன் துணையோடு சீரோடு வாழ்க சிறப்போடு வாழ்க  பேரோடு வாழ்க புகழோடு வாழ்க  இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்